கோகுல்ராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
ஆவணக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
கருப்பூர்:-
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொலை வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி மதுரை கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஓமலூரில் உள்ள கோகுல்ராஜின் வீட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வந்தார். அங்கு கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அவர்கள் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சால்வை அணிவித்து கோகுல்ராஜ் சாதி ஆணவக்கொலை வழக்கில் இறுதிவரை போராடி வெற்றி பெற்றதற்கு கட்சியின் மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதி ஆணவப்படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும், சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த ெகாலை வழக்கில் கோர்ட்டின் தீர்ப்பு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனுக்கு அரசு வேலை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்கும் போதோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவோ கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனுக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் சண்முகராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story