1 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
சேலம் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சுமார் 1 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சுமார் 1 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி
தமிழக அரசின் உத்தரவுப்படி 12 முதல் 14 வயது சிறுவர், சிறுமிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கார்பிவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 17.3.2008 தேதி முதல் 15.3.2010 வரை பிறந்த அனைத்து சிறுவர், சிறுமிகளும் தகுதியுடையவர் ஆவர்.
1 லட்சம் சிறுவர்கள்
சேலம் மாவட்டத்தில் 12 முதல் 14 வரையிலான சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 சிறுவர்களுக்கு நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை கார்பிவேக்ஸ் தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு ஏற்கனவே கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 577 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 77 ஆயிரத்து 78 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
84 சதவீதம் பேர்
கடந்த 3 மாதங்களில் 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாததன் காரணமாகவே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே சேலம் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story