கிணற்றில் குதித்து வங்கி ஊழியர் தற்கொலை
சேலத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை 14 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சேலம்:-
சேலத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை 14 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வங்கி ஊழியர்
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 28). இவர் தனியார் வங்கி ஒன்றில் கடன் தொகையை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். தியாகராஜனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.
உடல்நலக்குறைவால் மனம் உடைந்து காணப்பட்ட தியாகராஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 14-ந் தேதி (திங்கட்கிழமை) அவர், தான் விவசாயி ஒருவரது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கடிதம் ஒன்றை எழுதி வீட்டில் வைத்து விட்டு மாயமானார்.
கிணற்றில் தேடினர்
அன்று இரவு தியாகராஜன் எழுதிய கடிதத்தை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். உடனே அவர்களது வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு ெசன்று தியாகராஜனை தேடினர். இரவு நேரம் என்பதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று முன்தினம் காலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் தியாகராஜனின் செல்போன், செருப்பு கிடந்தது. உடனே தியாகராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடல் மீட்பு
செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அந்த கிணற்றுக்கு வந்தனர். தியாகராஜன் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிக அளவு இருந்ததால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
உடனே மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது. தொடர்ந்து 14 மணி நேரம் போராடி இரவு 10 மணி அளவில் தியாகராஜன் உடல் மீட்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story