வெடிமருந்து வெடித்து மாணவி பலிநெல்லை நிபுணர்கள் குழு திடீர் ஆய்வு
வெடிமருந்து வெடித்து மாணவி பலிநெல்லை நிபுணர்கள் குழு திடீர் ஆய்வு
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து மாணவி பலியானார். இதை தொடர்ந்து நெல்லை வெடிகுண்டு நிபுணர்கள் குழு வந்து திடீர் ஆய்வு செய்தனர்.
மாணவி பலி
ராஜாக்கமங்கலம் அருகே ஆறு தெங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கிய ராஜன் என்ற ராஜன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு தேன்மொழி (13), வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.
ராஜன் அனுமதியின்றி வீட்டில் வைத்து அவ்வப்போது பட்டாசுகள் தயாரிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பட்டாசு தயாரிப்பதற்காக வீட்டின் முன்பு ஒரு சிறிய அறையில் வெடிமருந்தை சாக்கு பையில் வைத்திருந்தார். அந்த அறைக்குள் வர்ஷா சென்றாள். அப்போது வெடிமருந்து வெடித்து சிதறியதில் வரஷா பலியானாள். தாயார் பார்வதி காயம் அடைந்தார்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராமலெட்சுமி (65) என்பவர் பட்டாசு தயாரிப்பதற்கு லைசென்ஸ் பெற்று, கடந்த 2012-ம் ஆண்டு வரையிலும் பட்டாசு தயாரித்து வந்துள்ளார். அதன்பின்பு லைசென்சை புதுப்பிக்கவில்லை என்பதும், அவர் தான் ராஜனுக்கு பட்டாசு தயாரித்து தரும்படி வெடிமருந்தை கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சோதனை
மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராமலெட்சுமி மேலும் சிலரிடம் இதுபோல் பட்டாசுகள் தயார் செய்து வாங்குவதாகவும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று ராஜாக்கமங்கலம் போலீசாருடன் கிராம நிர்வாக அலுவலர் சிபு, வருவாய் அலுவலர் கனி செல்வி வெடிகுண்டு மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் ஆறுதெங்கன் விளை பகுதிக்கு வந்தனர். அவர்கள் மோப்ப நாய் காஸ்பர் உதவியுடன் அந்த பகுதியை சல்லடை போட்டு தேடினர். அப்போது இன்னொரு மூதாட்டி வீட்டின் பின்புறமும், அதன் அருகில் உள்ள தோப்பில் ஓலைகளுக்கு இடையேயும் சில பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வு
கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளை போலீசார் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். மேலும் நெல்லையில் இருந்து வெடி குண்டுகள் குறித்து ஆய்வு செய்யும் சிறப்பு நிபுணர்கள் குழு வந்தது. அவர்கள் வெடிப்பொருட்களை தீடீர் ஆய்வு செய்து பட்டாசு செய்வதற்காக உபயோகப்படுத்தப்படும் மூலபொருட்கள் தான் என்பதை உறுதிசெய்தனர்.
இதனால் நேற்று அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
---
Related Tags :
Next Story