மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?
ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
மாவூற்று வேலப்பர் கோவில்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில், பண்டைக்காலத்தில் பளியர்கள் என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வசித்து வந்தனர்.
மலையில் தேன் எடுத்தும், மரவள்ளிக்கிழங்கை தோண்டி எடுத்தும் பழங்குடியின மக்கள் சாப்பிட்டு தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். அப்படி ஒரு முறை மரவள்ளிக்கிழங்கை எடுப்பதற்காக பழங்குடியின மக்கள் குழி தோண்டினர்.
அப்போது, அங்கிருந்து சுயம்புவாக முருகப்பெருமான் வெளிப்பட்டார். அதன் அருகே உள்ள மருதமர வேர்களில் இருந்து தன்னிச்சையாக ஊற்று கிளம்பி வந்துள்ளது.
பால், பன்னீர் காவடிகள்
இதனை பார்த்து ஆச்சரியமும், அதிசயமும் அடைந்த பளியர்கள், அந்த சுயம்பு சிலையை எடுத்து மருதமரங்களின் வேர்களில் இருந்து வந்த நீரில் குளிப்பாட்டி, தெய்வமாக வைத்து வணங்க ஆரம்பித்தனர்.
அன்று முதல் தற்போது வரையில் மாவூற்று வேலப்பர் கோவிலில் பளியர் இன மக்களே பூசாரிகளாக இருந்து வருகின்றனர். மருத மர ஊற்று வேலவர் என்பது மருவி, மாவூற்று வேலப்பர் என்று வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு மாவூற்று வேலப்பர் முருகனுக்கு ஒரு சிலை வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழா நாட்களில் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி மற்றும் பால்குடம், தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மாவூற்று வேலவரை வழிபட்டு செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இதைத்தவிர அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், இந்து மத பண்டிகை தினங்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம்.
ஆனால் மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் உருண்டோடி விட்டது. கும்பாபிேஷகம் நடத்தப்படாததால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் எந்தவொரு நீர்நிலைகளும் நிரம்பவில்லை. பருவமழையும் பொய்த்து போய் விட்டது. இதற்கு மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தாததே காரணம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
எனவே பழமை வாய்ந்த மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story