மீண்டும் 69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்


மீண்டும் 69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 5:09 PM IST (Updated: 17 March 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத போதிலும், மீண்டும் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.

ஆண்டிப்பட்டி:

 வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டினாலே, அது அணை நிரம்பியதாகவே கணக்கிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் 3 முறை இந்த அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் அணையில் இருந்து இதுவரை இல்லாத அளவில் பாசனத்திற்காக தொடர்ந்து 9 மாதங்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. 

கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், போதுமான நீர்வரத்து இருந்த காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் குறையவே இல்லை. குறிப்பாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே இருந்தது. 

மீண்டும் 69 அடியாக உயர்வு

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே சராசரியாக 68 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம், தற்போது மீண்டும் 69 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடல் போல் அணை காட்சி அளிக்கிறது. 

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையிலும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவிலேயே நீடிப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. வைகை அணையின் மொத்த உயரமான 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

381 கனஅடி தண்ணீர் வரத்து

வைகை அணை நிரம்பிய நிலையில் உள்ளதால் மதுரை, சேடப்பட்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 69.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 381 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story