தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
திருவண்ணாமலை
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
கட்டண தரிசன முறை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வேத யோக வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் இன்று குபேர லட்சுமி ஹோமம் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா காரணமாக கடந்த 2½ ஆண்டுகளாக திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போது கிரிவலம் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான விழாக்கள் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் விழாக்கள் நடைபெறும் இடங்களில் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த வேண்டும்.
மேலும் கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து கோவில்களிலும் தர்ம தரிசனம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோவில்களில் வி.ஐ.பி.களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தேவிகாபுரம் கோவில் பிரச்சினைக்கு இருதரப்பினரையும் அழைத்து பேசி சமாதான முடிவை எடுத்து கோவில் திருவிழாவை நடத்த வேண்டும்.
அதேபோல நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க நகைகள் உருக்கும் பணி
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்து இருந்த தங்க நகைகளை உருக்கும் பணி தொடங்க உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் சுமூகமான உறவில் இருந்தால் தான் நமக்கு நல்ல பல திட்டங்கள் நிறைவேற்ற முடியும். தமிழகத்தில் தற்போது விலைவாசி உயர்வு அதிகரித்து உள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும். கல்வி வியாபாரமாக இருக்கிறது. பிரதமர் மோடி, தாய்மொழி கல்வி கொள்கை வர வேண்டும் என்கிறார்.
எனவே தமிழகத்தில் தாய்மொழி கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
‘கடைசி விவசாயி’
டாஸ்மாக் கடைகளை மூடி கல்வி விவகாரத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை தமிழக முதல் - அமைச்சர் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும்.
மேலும் நடிகர் ரஜினி, சீமான் உள்ளிட்டோரும் அந்த படத்தை பார்க்க வேண்டும். இந்த படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து தமிழகத்தில் திரையிட வேண்டும்.
‘கடைசி விவசாயி’ படத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதனால் இயற்கை விவசாயிகள், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு சென்னையில் ஒரு தியேட்டரில் ஒரு நாள்திரையிட்டு காட்ட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story