சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; வாலிபர் பலி
கோவில்பட்டி அருகே பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரி
நெல்லையில் இருந்து சுண்ணாம்பு பவுடர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஆந்திரா மாநிலத்திற்கு புறப்பட்டது. லாரியை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ஓட்டினார். கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் வந்தபோது, லாரியின் டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் மளிகை கடை நடத்தி வரும் பெருமாள் மகன்கள் சுரேஷ் (வயது 22), முருகன் (18), தூத்துக்குடி மாரமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மகன் மோகன்தாஸ் (26) ஆகியோர் வியாபாரம் தொடர்பாக நேற்று காலையில் ஒரு காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். காரை மதுரையை சேர்ந்த முருகேசன் மகன் குருமூர்த்தி (23) என்பவர் ஓட்டினார்.
வாலிபர் சாவு
காலை 7 மணி அளவில் கார் கோவில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் கூச்சலிட்டனர். இதை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் நாலாட்டின்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுரேஷ், முருகன், குருமூர்த்தி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மோகன்தாஸ் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடும்பம்
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான மோகன்தாசுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், சஹானா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரை தெப்பக்குளம் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள ஒரு மளிகை கடையில் மோகன்தாஸ் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
Related Tags :
Next Story