7 மாதங்களாக தேடப்பட்டு வந்த வாலிபர் கைது
7 மாதங்களாக தேடப்பட்டு வந்த வாலிபர் கைது
உடுமலை:
உடுமலை அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 7 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்
உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டையைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது63). தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவராக இருந்து வருகிறார்.இவர் சம்பவ தினமான கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி ஸ்கூட்டரில், உறவினரைப்பார்ப்பதற்கு சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தளி சாலையில் இருந்து பிரியும் குரல்குட்டை பிரிவில் திரும்பி குரல்குட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கோழிப்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
செல்போன் பறிப்பு
அப்போது அவரை பின்தொடர்ந்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஸ்கூட்டருக்கு முன்னால் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஊருக்கு வழிகேட்பது போல் பன்னீர்செல்வத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
திடீரென்று அவரிடமிருந்த செல்போனையும் ரூ.700-ஐயும் பறித்துக்கொண்டு தாங்கள் வந்த வழியிலேயே திரும்பி தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து பன்னீர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்தனர்.
தனிப்படை
இந்த வழிப்பறி கொள்ளையர்களை பிடிப்பதற்காக உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் உத்திரவின்பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.சுஜாதா தலைமையில் ஏட்டுகள் பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன், முத்துமாணிக்கம், மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, கோவை உக்கடத்தைச்சேர்ந்த தக்காளி நிசார் என்கிற நிசாருதீன் (22), கோவை சுகுணாபுரத்தைச்சேர்ந்த அராத்நிசார் என்கிற மற்றொரு நிசாருதீன் (25) ஆகிய 2 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்து, பன்னீர்செல்வத்திடமிருந்து செல்போனை கைப்பற்றினர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த வழிப்பறி சம்பவத்தில் இவர்களுடன் சேர்ந்து ஈடுபட்ட மற்றொருவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகரைச்சேர்ந்த பேபி ஆனந்த் என்கிற ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பேபி ஆனந்த் என்கிற ஆனந்த குமாரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் 7மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த ஆனந்தகுமாரை (29) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story