எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம்
எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம்
நாமக்கல்:
எருமப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டம் தலைவர் பழனியாண்டி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பேரூராட்சியில் மின்மயானம் அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது, பேரூராட்சி சந்தையில் கூடுதலாக கடைகள் மற்றும் சிமெண்டு சாலை அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எருமப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த 50 பயனாளிகளை தேர்வு செய்து வீடு கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடம் கூட்டம் நடத்த போதிய இடவசதியின்றி உள்ளதால் எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே புதிய அலுவலக கட்டிடம் கட்ட அரசுக்கு கருத்து அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி துணைத்தலைவர் ரவி நன்றி உரையாற்றினார்
சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதல் மன்ற முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பாப்பு பாலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கவிதா அசோக்குமார் முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, சேந்தமங்கலம் அட்மா குழு சேர்மன் அசோக்குமார் ஆகியோர் அப்பகுதி மக்களுக்காக பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து விரிவாக பேசினர்.
அப்போது சில கவுன்சிலர்கள் அவர்களது வார்டுகளில் பழுதடைந்து காணப்பட்ட பொது குடிநீர் இணைப்புகளை சரி செய்து கொடுக்குமாறு கேட்டு கொண்டனர். அதனைக் கேட்ட எம்.எல்.ஏ பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணியிடம் குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story