பள்ளிப்பட்டு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்


பள்ளிப்பட்டு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2022 8:32 PM IST (Updated: 17 March 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வெளியகரம் பழைய காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). கூலித்தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு ரஜினி (30) என்ற மகனும், பூங்கொடி (26) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ரஜினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். பூங்கொடி திருமணம் முடிந்து பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் கிராமத்தில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான கண்ணன் தினந்தோறும் காலை வேளையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை 5 மணியளவில் இவர் நடைபயிற்சி செல்ல புறப்பட்டார். அப்படியே கர்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது மகளை பார்த்து விட்டு வர எண்ணி புறப்பட்டு சென்றார். பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்றபோது அதிவேகமாக அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் கண்ணனின் உடலுடன் அதே இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்று விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story