ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு சீல்
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுவரை நிலுவை தொகை ரூ.23 கோடி வசூலானது.
ஊட்டி
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுவரை நிலுவை தொகை ரூ.23 கோடி வசூலானது.
வாடகை நிலுவை
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூ.38 கோடி செலுத்தாத தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகள் நிலுவை தொகையை செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன.
21 கடைகளுக்கு ‘சீல்’
பின்னர் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த காலக் கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வாடகையை செலுத்த வில்ைல என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் வருவாய் அதிகாரி பிரான்சிஸ் தலைமையில் அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டனர்.
இறைச்சி, பேன்சி, மளிகை கடைகள் உள்பட 21 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் வாடகை செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.23 கோடி வசூல்
இதுகுறித்து நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ் கூறும்போது, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண்டும். சீல் நடவடிக்கையை தொடர்ந்து நிலுவை தொகை ரூ.23 கோடி வசூலாகி உள்ளது.
மீதமுள்ள நிலுவையை வசூலிக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.மேலும் ஊட்டி நகராட்சியில் குடிநீர், சொத்து வரி செலுத்தாமல் தனிநபர் இருந்து வந்தார். சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story