வெயிலின் தாக்கத்தை சமாளிக்க அரசு நடவடிக்கை- சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
வானிலை எச்சரிக்கை
மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பலர் பக்க விளைவுகள், நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் அதிகப்பட்சம் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த எச்சரிக்கையை அடுத்து மும்பை மாநகராட்சி மும்பை மக்கள் வெப்பத்தை சமாளிக்க அறிவுரைகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மந்திரி பதில்
இந்த நிலையில் நேற்று சட்டசபையில் சிவசேனா எம்.எல்.ஏ. சுனில் பரப், வெப்ப தாக்கத்தை சமாளிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பதிலளித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
மராட்டிய அரசு மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெப்ப தாக்க நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் ஒதுக்குவது, வெப்பத்தை சமாளிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெளியில் நடமாடும் நேரத்தை குறைத்தல், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது போன்ற ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story