‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கை
சென்னை உத்தண்டி கடற்கரை அருகே உள்ள நீலக்கடல் தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்தநிலையிலும், துருப்பிடித்து இருப்பது குறித்தும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக மின் பெட்டி சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.
பாதாள சாக்கடை சரி செய்யப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் இந்திரா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையானது ஆபத்தான நிலையில் சாலையில் இருந்து 1½ அடி அளவுக்கு மேல் தெரியும் படியாக அமைந்திருந்தது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. பின்னர் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பாதாள சாக்கடை சரி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ந்த சாலைவாசிகள் சரி செய்த ஊழியர்களுக்கும், இதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தாக காட்சியளிக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை பழுது பார்த்து சீரமைப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமாரி, திருவேற்காடு.
குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்
சென்னை திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தோட்டம் பகுதியில் உள்ள தெருவில் இருக்கும், பொது குடிநீர் குழாய்களில் குடிநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாரத்தில் 2 முறை மட்டுமே இந்த பகுதிக்கு குடிநீர் திறந்து விடப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- முஸ்தபா, திருவல்லிக்கேணி.
நிழற்குடை வேண்டும்
சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து பஸ் ஏறும் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் அவர்கள் படும் சிரமங்கள் அதிகமாக உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.
- உதயகுமார், கோடம்பாக்கம்.
கழிவுநீர் தேக்கம்; மக்கள் அவதி
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியை ஒட்டியுள்ள கட்டண கழிப்பிடத்தின் அருகே சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்தப்படுத்தி மேலும் இந்த பகுதியில் கழிவு நீர் சேராத வகையில் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.
- ராஜசேகர், தாம்பரம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
சென்னை நங்கநல்லூர் 41-வது சாலையும், நேரு காலனி 20-வது சாலையும் இணையும் சந்திப்பில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. அருகில் பள்ளி இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்படுமா?
- பாபு, நங்கநல்லூர்.
மூடப்படாத மழைநீர் கால்வாய்
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியிலுள்ள பாண்டியன் தெரு அருகே மழைநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மேலும் திறந்த நிலையில் இருக்கும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே இந்தநிலை தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தனிஷ்கந்தன், செங்கல்பட்டு.
சிக்னல் விளக்குகள் எரிவதில்லை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராமரத்னா பஸ் நிறுத்தம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பல நாட்களாக இயங்காமல் உள்ளது. இதனால் புதிய ராணுவ சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பழுது பார்த்து சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பாலரூபன், ஆவடி.
உடைந்த குடிநீர் குழாய்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் அதிகளவு வெளியேறி சாக்கடையுடன் கலந்து வீணாகிறது. இதன் விளைவாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடைந்த குழாயை சரி செய்ய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், நந்திவரம்.
Related Tags :
Next Story