மைசூருவில் கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரி விரைவாக தொடங்கப்படும்-மந்திரி சுதாகர்
மைசூருவில் கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரி விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்
பெங்களூரு: மைசூருவில் கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரி விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பட்ஜெட் மசோதா
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடந்து சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி பட்ஜெட் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 10-வது நாள் கூட்டம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.
இந்த கேள்வி நேரத்தில் மைசூரு மாவட்டம் சாமராஜ தொகுதி உறுப்பினர் நாகேந்திரா கேட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
புற்றுநோய் ஆஸ்பத்திரி
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது மைசூரு மற்றும் சிவமொக்காவில் கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிகளுக்கு தலா ரூ.50 கோடி வீதம் ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ரூ.50 கோடியில் ஆஸ்பத்திரி அமைப்பது கடினம் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு குறைந்தது ரூ.338 கோடி தேவை என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் நிதித்துறை அந்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. அதனால் மைசூருவில் அந்த ஆஸ்பத்திரியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரூ.50 கோடி செலவில் முதல் கட்டமாக கித்வாய் புற்றுநோய் ஆஸ்பத்திரி பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஆஸ்பத்திரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட அறிக்கை தயாரித்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை கிடைத்ததும் அதற்கு மந்திாிசபையில் ஒப்புதல் பெற்று ஆஸ்பத்திாி அமைக்கப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story