பணி பாதுகாப்பு கேட்டு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் தர்ணா
தேவதானப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் கத்தியுடன் வந்து ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேனி:
கத்தியுடன் மாணவர் மிரட்டல்
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியர்கள் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவர் பள்ளிக்கு ஒரு கத்தியுடன் வந்து பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டு தகராறு செய்தார். அங்கிருந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு அந்த மாணவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தேவதானப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.
பின்னர் அந்த மாணவரை அழைத்து அவருக்கு போலீசார் அறிவுரைகள் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
தர்ணா போராட்டம்
இந்நிலையில் அந்த மாணவர் நேற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் வந்தனர்.
முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் அன்பழகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கவுதம் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
பணி பாதுகாப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், " தேவதானப்பட்டி பள்ளியில் நடந்த சம்பவத்தால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை புத்தகம் எடுத்து வருமாறு ஆசிரியர் கூறினார். மறுநாள் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை ஆசிரியர் கண்டித்த போது ஒரு மாணவர் ஆசிரியரின் கண்ணத்தில் அறைந்தார்.
மேலும் ஜி.கல்லுப்பட்டி அரசு பள்ளி முன்பு அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டு ஆசிரியைகளை கேலி செய்கின்றனர்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்து விசாரணையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியில் மாணவர்களிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். இதனால் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகனிடம் ஆசிரியர்கள் மனு கொடுத்தனர். அவர், இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story