திருக்கோவிலூர் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு
திருக்கோவிலூர் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மருத்துவமுகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காளை மற்றும் பசுமாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புகார் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட கால்நடைகளை பார்வையிட்டு அவைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் லிட்டர் பால், ஆவின் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே அனுப்பப் படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் திருக்கோவிலூர் பகுதியில் முகாமிட்டு போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்கள் அமைத்து நோய் பாதிப்புக்குள்ளான கால்நடைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story