அரசு பஸ்சை சேதப்படுத்திய மாணவர்கள்
படிக்கட்டில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அரசு பஸ்சை சேதப்படுத்தினர்.
போடி:
போடி பஸ்நிலையத்தில் இருந்து பண்ணைத்தோப்பு கிராமத்துக்கு நேற்று மாலை அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் ஏறி அமர்ந்து இருந்தனர்.
சில மாணவர்கள் உள்ளே செல்லாமல், படிக்கட்டில் தொங்கியபடி நின்றனர். அவர்களை உள்ளே சென்று அமருமாறு டிரைவர் கூறினார். ஆனால் அவரது பேச்சை மாணவர்கள் கேட்கவில்லை. இதனால் பஸ்சை எடுக்காமல் டிரைவர் நிறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சிலர், ஆத்திரம் அடைந்து பஸ்சுக்குள் ஏறி மேற்கூரையை கைகளால் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். பின்னர் அங்கு அரசு போக்குவரத்து கழகத்தினர் மற்றும் மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இருதரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பண்ணைத்தோப்பு கிராமத்துக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story