குப்பை வாகனங்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
விழுப்புரத்தில் குப்பை வாகனங்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளிச்செல்ல பேட்டரி மூலம் இயங்கக்கூடிய சிறிய வகை வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியை முடித்துவிட்டு மாலை வேளையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும். இந்நிலையில் இந்த வாகனங்களில் இருந்த 12 பேட்டரிகள் திருட்டுப்போனது. இதன் மதிப்பு ரூ.57 ஆயிரமாகும்.
இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் குப்பை அள்ளிச்செல்லும் வாகனங்களில் இருந்து பேட்டரிகளை விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த கணபதி (வயது 19), காணையை சேர்ந்த நிர்மல்குமார் (21) ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story