பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் 8-வது நாளாக குறுக்கு விசாரணை


பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் 8-வது நாளாக குறுக்கு விசாரணை
x
தினத்தந்தி 17 March 2022 11:20 PM IST (Updated: 17 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை வழக்கில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் 8-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், குறுக்கு விசாரணையை தொடங்கி 7 நாட்கள் நடத்தியுள்ள நிலையில் இன்னும் அந்த குறுக்கு விசாரணை நிறைவடையவில்லை.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகிய 3 பேரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்கலாம் என்று நீதிபதி கோபிநாதன் கூறினார். அதன்படி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் தினகரன் ஆஜராகி, பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் 8-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தினார். இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி குறுக்கு விசாரணை செய்தார். அதற்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி உரிய பதில் அளித்தார். இதனை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார். இந்த குறுக்கு விசாரணை காலை 10.45 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடந்தது. இருப்பினும் இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால் அதனை நிறைவு செய்வதற்காக இவ்வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு (புதன்             கிழமை) ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Next Story