முருகன் கோவில்களில் தேரோட்டம்
சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலின் வடக்குகோபுர வாயில் அருகே பாண்டியநாயகர் என்கிற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கீழரதவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தீர்த்தவாரி
தேர் 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் 11.30 மணிக்கு நிலையை அடைந்தது. தொடர்ந்து மாலையில் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர விழாவையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.
கொளஞ்சியப்பர் கோவில்
விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்தர விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பங்குனி உத்திரவிழாவையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை தீர்த்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக கொளஞ்சியப்பருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். தொடர்ந்து மாலையில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதேபோல் விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story