காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கல்வீச்சு
சிதம்பரத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது வாலிபர் கல்வீசி தாக்கினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நடன சிகாமணி. இவரது மகன் அழகர் (வயது 21). இவர் சிதம்பரத்தில் சீர்காழி மெயின் ரோட்டில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் எலக்ட்ரீசியன் 2-ம் ஆண்டு படித்து வரும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி வழக்கம் போல் கல்லூரி முடிந்து, சிதம்பரம்-சீர்காழி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகர் தன்னை காதலிக்க வேண்டும் என்று கூறி மாணவியிடம் வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கல்வீசி தாக்குதல்
இதனால் ஆத்திரடைந்த அழகர், அங்கு கிடந்த கல்லை எடுத்து மாணவி மீது வீசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் மாணவியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து அழகரை கைது செய்தார்.
பார்த்தவுடன் காதல்
விசாரணையில், மாணவி தற்போது படிக்கும் தொழிற் பயிற்சி கல்லூரியில் அழகர் ஏற்கனவே படித்து வந்ததும், அப்போது, அங்கு வைத்து மாணவியை பார்த்த நாள் முதல் ஒருதலையாக அவர் காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story