கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 12:04 AM IST (Updated: 18 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே தியானபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:
திருவாரூர் அருகே தியானபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறக்க முடிவு
திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியானபுரம் கிராமத்திலிருந்து சிங்களாஞ்சேரி சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இவ்வழியாகத்தான் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.இதனை அறிந்த கிராம மக்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாகவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது என மனு அளித்திருந்தனர்.
கிராம மக்கள் முற்றுகை
 இந்த நிலையில் நேற்று அந்த சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இந்த தகவலை அறிந்த தியானபுரம் கிராமத்தை சோ்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கு திரண்டு வந்து புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை திறப்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி தீர்வு செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story