தமிழக அரசு பெண்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு


தமிழக அரசு பெண்களுக்கு என்றென்றும்  உறுதுணையாக இருக்கும் அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு
x
தினத்தந்தி 18 March 2022 12:33 AM IST (Updated: 18 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், தமிழக அரசு பெண்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் நடந்த திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், தமிழக அரசு பெண்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
திருமண நிதி- 8 கிராம் தங்கம்
குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.  அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் 3350 பயனாளிகளுக்கு ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2550 பயனாளிகளுக்கு ரூ.10.92 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (அதாவது நேற்று) இறுதி கட்டமாக 560 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.2.80 கோடி திருமண நிதியுதவியும், 240 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.60 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி என மொத்தம் 800 பயனாளிகளுக்கு ரூ.3.40 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உறுதுணையாக இருக்கும்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
அதேபோல் பெண்களை அதிகாரப்படுத்துவது, உரிமைகள் வழங்குவது, பெண்களை சமமாக நடத்துவது, பெண்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தருவது என்று பெண்களுக்கு இந்த வாய்ப்பினை பெற்று கொடுத்தது இந்த அரசு. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வழியில் செயல்படும் முதல்-அமைச்சர், பெண்கள் பஸ்சில் இலவசமாக பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ததால் பெண்கள் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொள்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு என்றென்றும் உறுதுணையாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர மனோ தங்கராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி, கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராய பள்ளிகளின் மேலாண்மை அதிகாரி சுந்தரபாண்டி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஜெகநாதன் (திருவட்டார்), ராஜேஷ்வரி (முன்சிறை), சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் தேவதாஸ் உள்பட அதிகாரிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story