ஆட்டோவில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.
தீவிர வாகன சோதனை
குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சாவை பறிமுதல் செய்வதோடு, அதனை கடத்தி வருபவர்களையும் கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள நரிகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
6 கிலோ கஞ்சா
அப்போது, அந்த வழியாக ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அவை நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆட்டோவில், கொட்டாரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 20), செல்வன்புதூரை சேர்ந்த ஜெனிஸ் (20) ஆகியோர் இருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது, ஒரு கவரில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
ஒருவர் தப்பியோட்டம்
அப்போது, அங்கு ஆட்டோவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் கொட்டாரம் பகுதியை சேர்ந்த மெர்லின்மோசஸ் (20), மந்தாரம்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ் (20) என்பதும் தெரியவந்தது. அப்போது, திடீரென அஜித்குமார் அரிவாளால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
3 பேர் கைது
பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மெர்லின்மோசஸ், ஜெனிஸ், பிரகதீஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, கத்தி, அரிவாள், ஆட்டோ,ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அஜித்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story