14 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


14 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 March 2022 12:47 AM IST (Updated: 18 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
 
கோர்பேவேக்ஸ் தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் 12, 13 மற்றும் 14 வயது உடைய சிறுவர், சிறுமிகளுக்கும் கொரோனா தடுப்பூசி தயார் செய்யப்பட்டது. இவர்களுக்காக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

நெல்லை மாவட்டத்தில்...
தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடும் பணி பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. நெல்லை மாவட்டத்துக்கு உரிய மருந்து தாமதமாக வந்து சேர்ந்தது. இதையடுத்து நேற்று நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கவுன்சிலர் சுதா மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியை மேபல் ராணி மற்றும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
அந்த பள்ளியில் மட்டும் 113 மாணவிகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது.

48 ஆயிரத்து 400 பேர்
நெல்லை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 48 ஆயிரத்து 400 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. பெரும்பாலும் அந்த வயதுடைய சிறுவர், சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்வதால் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முன்கூட்டியே பெற்றோர்களிடம் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது. 
தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு 28 நாட்கள் கழித்து 2-வது தவணையாக கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story