அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி மறுப்பு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலெக்டரிடம் புகார்


அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி மறுப்பு-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 18 March 2022 12:49 AM IST (Updated: 18 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

கரூர், 
அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளான குடிநீர் திட்ட பணிகளோ, வடிகால் மற்றும் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் கரூர் மாவட்டத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள இயலவில்லை. மேலும் ஒப்பந்த புள்ளிகளில் கலந்து கொள்ளும் நபர்களை சிலர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தற்போது பல்வேறு முறைகேடுகளை அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். கரூர், கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் எந்தவிதமான திட்ட பணிகளும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை ஆணையர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்கின்றனர். எனவே அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:- சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் இதுபோன்று எதுவும் நடக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு நேர்மாறாக, கரூர் மாவட்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் அ.தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள், பலமுறை கலெக்டரிடம் முறையிட்டு உள்ளனர். தொடர்ந்து எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது அது சம்பந்தமாக மனுவை கலெக்டரிடம் கொடுத்து உள்ளோம். கூடிய விரைவில் நியாயம் கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் நடந்தால் அதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தி மக்களுடைய கவனத்திற்கு எடுத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story