ராஜாக்கமங்கலம் அருகே சிறுமி பலியான விவகாரம்: வெடிமருந்து பதுக்கி வைத்த சகோதரிகள் கைது
ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து சிறுமி பலியான விவகாரத்தில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர்
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே வெடிமருந்து வெடித்து சிறுமி பலியான விவகாரத்தில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மாணவி பலி
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் பாக்கிய ராஜன் என்ற ராஜன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு தேன்மொழி (13), வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.
ராஜன் பட்டாசு தயாரிப்பதற்காக வீட்டின் முன்பு ஒரு சிறிய அறையில் சாக்கு பையில் வெடிமருந்தை வைத்திருந்தார். சம்பவத்தன்று அந்த அறைக்குள் சிறுமி வர்ஷா சென்ற போது வெடிமருந்து வெடித்து சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் தாயார் பார்வதி காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் ஆய்வு
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (65) என்பவர் பட்டாசு தயாரிப்பதற்கு லைசென்ஸ் பெற்று, கடந்த 2012-ம் ஆண்டு வரையிலும் பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.
அதன்பின்பு லைசென்சை புதுப்பிக்கவில்லை என்பதும், அவர் தான் ராஜனுக்கு பட்டாசு தயாரித்து தரும்படி வெடிமருந்தை கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. ராமலட்சுமி இதுபோல் மேலும் சிலரிடம் வெடிமருந்தை கொடுத்து பட்டாசுகள் தயார் செய்து வாங்குவதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் ராஜாக்கமங்கலம் போலீசாருடன் கிராம நிர்வாக அலுவலர் சிபு, வருவாய் அலுவலர் கனிசெல்வி, வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆறுதெங்கன்விளை பகுதிக்கு வந்து மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு நடத்தினர்.
70 கிலோ வெடி பொருட்கள்
அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்க பார்வதி (85) என்னும் மூதாட்டி வீட்டின் பின்புறம் உள்ள தோப்பில் ஓலைகளுக்கு இடையே சில பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ வெடி மருந்துகள் மற்றும் 8 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளை நெல்லையில் இருந்து வந்த வெடி குண்டுகள் குறித்து ஆய்வு செய்யும் சிறப்பு நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. இதில் வெடிப்பொருட்கள் பட்டாசு செய்வதற்காக உபயோகப்படுத்தப்படும் மூலபொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ராமலட்சுமி (65), அவரது தங்கை தங்கம் (57) ஆகிய இருவரும் அந்த ்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பட்டாசு தயார் செய்ய அனுமதியின்றி வெடிமருந்துகளை பதுக்கி வைத்து வினியோகம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story