கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து; பஸ் உரிமையாளர் பலி


கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து; பஸ் உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 18 March 2022 1:01 AM IST (Updated: 18 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

நொய்யல், 
கார் கவிழ்ந்து விபத்து
கரூர் கிழக்கு ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 63). இவர் தனியார் பஸ் உரிமையாளர். இவரது மனைவி ரேவதி (56). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், ரேவதியின் தம்பி பேரனுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக ஜெகதீசன் தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
நொய்யல் ஆசாரிபட்டறை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த ஜெகதீசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரேவதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
பஸ் உரிமையாளர் பலி
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கார் கண்ணாடிகளை உடைத்து கணவன்-மனைவியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெகதீசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ரேவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Next Story