தர்மபுரி நகரில் முதல்கட்டமாக ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்-நகராட்சி கூட்டத்தில் தலைவர் அறிவிப்பு
தர்மபுரி நகரில் முதல் கட்டமாக ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தெரிவித்தார்.
தர்மபுரி:
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பச்சியம்மன் கோவில் அருகில் உள்ள மயானத்தில் நினைவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள், சமாதிகளை அகற்றி இனிவரும் காலங்களில் உடல்களை அடக்கம் செய்ய ஒரு வரையறை வகுக்க வேண்டும். நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு போடப்பட்டுள்ள கம்பி வேலிகளை அகற்ற வேண்டும். குமாரசாமிப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடங்களை கட்ட வேண்டும். அங்கு உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும். சுகாதார வளாகங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வளர்ச்சி பணிகள்
கூட்டத்தில் நகராட்சித்தலைவர் லட்சுமி நாட்டான் மாது பேசும் போது,‘தர்மபுரி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்களின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிதி வந்தவுடன் அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தர்மபுரி நகரில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தர்மபுரி நகராட்சி முதன்மை நகராட்சியாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் பேசும் போது,‘தர்மபுரி நகராட்சி மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. அரசின் நிதி கிடைக்க பெற்றவுடன் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான உரிய டெண்டர் விடப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
கண்காணிப்பு கேமரா
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் பேசுகையில், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை கண்காணிக்கவும் கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு, மேலாளர் விஜயா, வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story