அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனுக்குடன் ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்-புத்தாக்க பயிற்சி முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி வலியுறுத்தல்


அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனுக்குடன் ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்-புத்தாக்க பயிற்சி முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2022 1:10 AM IST (Updated: 18 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான வசதிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனுக்குடன் ஏற்படுத்தி தர முன்வர வேண்டும் என்று புத்தாக்க பயிற்சி முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.

தர்மபுரி:
ஊட்டச்சத்து குறைபாடு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் 1,333 அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், 12 ஆயிரத்து 200 கர்ப்பிணிகள், 11 ஆயிரத்து 600 பாலூட்டும் தாய்மார்கள் சத்தான உணவு மற்றும் இணை உணவை பெற்று பயன் பெறுகிறார்கள். 
மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வருகிற 21-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. குழந்தைகள் சிறு வயது முதல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன் வாடி மையங்களை அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அங்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்தி தர முன் வர வேண்டும்.
குழந்தை திருமண தடுப்பு
மாவட்டத்தில் ஏற்கனவே 58 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 41 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், ரத்தசோகை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எள்ளு மிட்டாய் வழங்கும் திட்டம் தமிழக அரசால் முன் மாதிரி வட்டாரமாக பென்னாகரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது.
13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை முழுமையாக தடுக்க விழிப்புணர்வு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட மேலாளர் ஜான்சிராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள்மாள், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் அருண்கிரிதாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்த பிரியா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story