தஞ்சை அருகே கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்


தஞ்சை அருகே கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 1:15 AM IST (Updated: 18 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி, தஞ்சை அருகே கைவிலங்குடன் தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வல்லம்:
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி, தஞ்சை அருகே கைவிலங்குடன் தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கோர்ட்டில் ஆஜர்படுத்த...
நாகை மாவட்டம் நாகூர் பாலக்காடு வடகுடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தனசேகரன்(வயது 31). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட தனசேகரன் கோபிசெட்டிப்பாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வழிப்பறி வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தனசேகரனை அழைத்து வர நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தில் இருந்து ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார், போலீஸ் வாகனத்தில் கோபிச்செட்டிப்பாளையம் சென்றனர்.
வாகனத்தை நிறுத்தினார் 
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் இருந்து கைதி தனசேகரனை அழைத்துக்கொண்டு போலீசார், நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு வந்தனர்.
நேற்று காலை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார். போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவருடன் மற்றொரு போலீஸ்காரரும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
கைவிலங்குடன் தப்பியோட்டம்
அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்த இரண்டு போலீசார், தூங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. கைதி தனசேகரன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கை விலங்குடன் தப்பியோடி விட்டார்.
இந்த நிலையில் இயற்கை உபாதையை கழித்து விட்டு வந்த போலீஸ் வாகன டிரைவரும், அவருடன் சென்ற போலீஸ்காரரும், போலீஸ் வாகனத்தில் கைதி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் கைதி தப்பியோடியது மற்ற போலீஸ் வாகனத்தில் இருந்த மற்ற போலீசாருக்கும் தெரிய வந்தது.
தீவிர தேடுதல் வேட்டை
இதனையடுத்து வளம்பக்குடி கிராம‌ மக்களுடன் இணைந்து தப்பி ஓடிய கைதி தனசேகரனை சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தேடினர். எங்கு தேடியும் கைதி தனசேகரன் சிக்கவில்லை. இது குறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தப்பியோடிய கைதி தனசேகரனை தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். 
தஞ்சை மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ரெயில் மூலமாக கைதி தனசேகரன் தப்பி செல்வதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள ெரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 
பரபரப்பு
தஞ்சை மாவட்டத்தை ஒட்டி உள்ள திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்பட பக்கத்து மாவட்ட போலீசாருக்கும் கைதி தப்பி ஓடிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பக்கத்து மாவட்டங்களிலும் கைதி தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர். 
போலீஸ் வாகனத்தில் இருந்து கைவிலங்குடன், கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story