பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்


பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 March 2022 1:22 AM IST (Updated: 18 March 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் பெரம்பலூர், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் விளையாட்டுகளுக்கான பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாவட்ட அளவில் வருகிற 23-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஹேண்ட் பால், ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதலாக கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், மேசைப்பந்து, வில்வித்தை போன்ற விளையாட்டுகளும் நடைபெறும். விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ-மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இளையதள முகவரியில் பூர்த்தி செய்து வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story