தென்காசி புதிய பஸ்நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்- நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


தென்காசி புதிய பஸ்நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்- நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 18 March 2022 1:33 AM IST (Updated: 18 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி புதிய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்
தென்காசி நகராட்சி கவுன்சிலர்களின் முதலாவது கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரிசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:-

வீணாகும் குடிநீர்
சங்கர சுப்பிரமணியன் (பா.ஜ.க):- தென்காசி ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு வரி விதிக்கும்போது நகராட்சி கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் விதிக்க வேண்டும்.
முகம்மது மைதீன் (சுயேச்சை):- ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் மேலும் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. போதிய நீர் சேமிப்பதற்கு உரிய வழியை ஏற்படுத்தி புதிய இணைப்புகள் வழங்க வேண்டும்.
வசந்தி (ம.தி.மு.க.):- ஜமாலியா நகரில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். காளிதாசன் நகரில் குப்பைகள் சேரவிடாமல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காதர் முகைதீன் (காங்கிரஸ்):- நகரின் அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ஏற்பாடு
உமா மகேஸ்வரன் (அ.தி.மு.க.):-புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
லட்சுமண பெருமாள் (பா.ஜ.க.):- 30-வது வார்டில் உள்ள 4 குடிநீர் இணைப்புகளில் 1-ல் மட்டும்தான் தண்ணீர் வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும். மேலும் குப்பைகளை ஒரே இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
தலைவர் சாதிர்:- குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கூடுதலாக 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வார்டுகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கருணாநிதி பெயர் சூட்ட...
பின்னர் தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு தலைவர் சாதிர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பா.ஜ.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அந்த தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story