கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
மேலூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் மீன்களை பிடித்தனர்.
மேலூர்
மேலூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் மீன்களை பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பாசன கண்மாய்களில் மீன்களை பிடிக்காமல் பாதுகாத்து வளர்த்து மாசி மாதம் மீன்பிடி திருவிழாவை ஆண்டுத்தோறும் நடத்தி வருகின்றனர். தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் பொதுமக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக மீன்களை பிடிப்பதும், அவ்வாறு பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என்பதால் வீடுகளில் மீன்களை குழம்பு வைத்து சாப்பிடுவதும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு மேலூர் அருகே அய்யமுத்தான்பட்டியில் பூலான்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாய் கரையில் இப்பகுதி மக்கள், காவல் தெய்வமாக வழிபடும் கரைமுனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பாரம்பரிய வழக்கம்
இந்த கண்மாய் தண்ணீரில் வளரும் மீன்களை மாசி மாதம் கிராம மக்கள் ஒன்று கூடி கரைமுனியாண்டி சுவாமியை வழிபட்டு மீன்களை பிடிப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு மீன்பிடி விழா பாரம்பரிய வழக்கப்படி நடைபெற்றது. முன்கூட்டியே இதற்கான நாள் குறித்து சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உறங்கான்பட்டி, அழகிச்சிபட்டி, புதுப்பட்டி, குப்பச்சிபட்டி, கட்டாணிபட்டி, குறிச்சிபட்டி, கூலிபட்டி, கோட்டனத்தாம்பட்டி, மன்றமலைப்பட்டி, சருகுவலயபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பேர் பூலான்குடி கண்மாயை சுற்றி கூடினர்.
கச்சா வலை, ஊத்த கச்சா, பெரிய மீன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடிக்க பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் கரைமுனியாண்டி சுவாமியை வழிபட்டு தாங்கள் தலையில் கட்டியிருந்த வெள்ளை துண்டுகளை அவிழ்த்து அதனை கொடி போல் ஆட்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கினர்.
மீன் குழம்பு
அப்போது கண்மாயை சுற்றியிருந்த அனைவரும் கண்மாய் தண்ணீருக்குள் பாய்ந்து சென்றனர். அந்த நேரத்தில் தண்ணீரில் இருந்த மீன்கள் துள்ளி குதித்தன. பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களைகட்டியது. அயிரை, கெண்டை போன்ற சிறிய வகை நாட்டு மீன்கள் மட்டுமே கிடைத்தன. பிடித்த மீன்களை வீடுகளுக்கு எடுத்து சென்று கிராம மக்கள் சமைத்து சாமிக்கு படையலிட்ட பின் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் இப்பகுதி கிராமங்களில் வீடுகளில் கம,கமவென மீன் குழம்பு வாசனை மணத்தது.
Related Tags :
Next Story