மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை பின்பற்றி பெங்களூருவில் 4 மாதத்தில் 70 ஆயிரம் பேர் கண்கள் தானம்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை பின்பற்றி பெங்களூருவில் கடந்த 4 மாதங்களில் 70 ஆயிரம் பேர் கண்களை தானம் செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 7,641 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
பெங்களூரு:
கண்கள் தானம் செய்த புனித்...
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமாா். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி அவர் மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருந்தார். பல்வேறு ஏழை மக்களின் படிப்பு, மருத்துவ செலவுக்காக பண உதவி வழங்கி இருந்தார்.
புனித் ராஜ்குமார் மரணம் அடையும் முன்பாக தனது கண்களை தானம் செய்திருந்தார். அதன்படி, அவர் மரணம் அடைந்த பின்பு பெங்களூருவில் உள்ள நாராயணா நேத்ராலயா ஆஸ்பத்திரிக்கு புனித் ராஜ்குமாரின் கண்கள் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புனித் ராஜ்குமாரின் கண்களை 5 பேருக்கு பொருத்தி, அவர்களுக்கு பார்வை கிடைத்தன.
70 ஆயிரம் பேர் கண் தானம்
புனித் ராஜ்குமார் கண்களை தானம் செய்திருப்பதை அறிந்ததும், அவரது ரசிகர்களும் தங்களது கண்களை தானம் செய்வதாக அறிவித்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது கண்களை தானம் செய்வதாக கூறி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று எழுதி கொடுத்தனர். மேலும் கண் தானம் பற்றி அவரது ரசிகர்கள் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு கடந்த 4 மாதத்தில் மட்டும் நாராயண நேத்ராலயா ஆஸ்பத்திரியில் 70 ஆயிரம் பேர் தங்களது கண்களை தானம் செய்துள்ளனர்.
கடந்த 4 மாதத்தில் 70 ஆயிரம் பேர் கண்களை தானம் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். இதற்கு நடிகர் புனித் ராஜ்குமாரே காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
7,641 பேர்...
கண்களை மட்டும் இல்லாமல் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் ஏராளமானோர் முன்வந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 2,775 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 4 மாதங்களில் 7,641 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் ரத்த தானம்
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்த நாளின் போதும் அவரது ரசிகர்கள் கண்கள் தானம் பற்றியும், உடல் உறுப்புகள் தானம் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி நேற்றும் ஏராளமானோர் கண்கள் தானம் ெசய்வதாக கடிதம் வழங்கி உள்ளனர்.
மேலும் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களாக, அவரது ரசிகர்கள் ரத்த தானமும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
1,022 கண்கள் தானம்
பெங்களூருவில் கொரோனா காரணமாக கண்களை தானம் செய்ய யாரும் முன்வராமல் இருந்ததுடன், கண்களை பெற முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் மாதத்திற்கு 50 கண்கள் மட்டுமே ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக கிடைத்திருந்தது. ஆனால் கடந்த மாதங்களாக சராசரியாக 250 கண்கள் தானமாக கிடைத்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பின்பு கடந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 1,022 கண்கள் ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story