சோதனைக்கு உள்ளான 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியது என்ன? - ஊழல் தடுப்பு படை பரபரப்பு தகவல்
சோதனைக்கு உள்ளான 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியது என்ன? என்பது பற்றிய பரபரப்பு தகவல்களை ஊழல் தடுப்பு படை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு:
ஊழல் தடுப்பு படை சோதனை
கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 18 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என 77 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அந்த அதிகாரிகளின் வீடுகளில் சிக்கிய ஆவணங்கள், நகை, பணம் குறித்த தகவல்களை ஊழல் தடுப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
அதன்படி, பெங்களூருவில் வசிக்கும் அரசு அதிகாரியான சிவக்குமார் வீட்டில் இருந்து 2 கிலோ 707 கிராம் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.52 ஆயிரம், ஒரு கார், 3 வீடுகள், ஒரு வணிக வளாகத்தின் சொத்து பத்திரம் ஆகியவை சிக்கி உள்ளது.
89 ஏக்கர் விவசாய நிலம்
பெங்களூருவில் கூடுதல் கமிஷனராக இருக்கும் ஞானேந்திரகுமாருக்கு பெங்களூருவில் 3 வீடுகள், மைசூருவில் ஒரு வீடு, பெங்களூருவில் 3 வீட்டுமனைகள், ஒரு வணிக வளாகம், சித்ரதுர்காவில் 10 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர அவரது வீட்டில் 1 கிலோ 640 கிராம் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள், கார், ரூ.2¾ லட்சம் சிக்கி இருக்கிறது.
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் துணை இயக்குனராக பணியாற்றும் ராகேஷ்குமாருக்கு ஒரு வீடு, 4 வீட்டுமனைகள், 5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அவரது வீட்டில் இருந்து 436 கிராம் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கி இருக்கிறது.
யாதகிரி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் கனகட்டிக்கு 3 வீடுகள், 2 வீட்டுமனைகள், 89 ஏக்கர் விவசாய நிலம், ரூ.6 லட்சம், 3 கார்கள் சிக்கி இருக்கிறது. அவரது வீட்டு உபயோக பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.30 லட்சம் என தெரியவந்துள்ளது.
7 வீட்டுமனைகள்
கதக் மாவட்ட துணை கமிஷனராக இருக்கும் பசவகுமாருக்கு ஒரு வீடு, 7 வீட்டு மனைகள், வங்கி கணக்கில் ரூ.25 லட்சம், 583 கிராம் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி பொருட்கள், 21 ஏக்கர் விவசாய நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கி இருக்கிறது.
ராமநகர் மாவட்டத்தில் உதவி கமிஷனராக இருந்து வரும் மஞ்சுநாத்திற்கு பெங்களூருவில் 4 மாடிகளை கொண்ட ஒரு வீடு, 2 வீட்டுமனைகள், 710 கிராம் தங்க நகைகள், 3½ கிலோ வெள்ளி பொருட்கள், அவரது வங்கி கணக்கில் ரூ.60 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் சமூக நலத்துறையில் இயக்குனராக இருக்கும் சீனிவாசுக்கு பெங்களூருவில் ஒரு வீடு, துமகூருவில் ஒரு வீடு, 322 கிராம் தங்க நகைகள், 1¾ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம், வங்கி கணக்கில் ரூ.26 லட்சம் இருப்பது தெரியவந்தது.
ஒட்டுமொத்தமாக 15 கிலோ நகைகள்
இதுபோன்று, மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வீடுகள், வீட்டுமனைகள், விவசாய நிலங்கள் வாங்கி வைத்திருப்பதும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. சோதனைக்கு உள்ளான 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து மொத்தம் 15 கிலோ தங்க நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், 44 வீடுகள், 53 வீட்டுமனைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த 18 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், அந்த அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story