ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம்: முஸ்லிம் மாணவிகளுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுமா? - சட்டசபையில் மந்திரி மாதுசாமி பதில்


ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம்: முஸ்லிம் மாணவிகளுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுமா? - சட்டசபையில் மந்திரி மாதுசாமி பதில்
x
தினத்தந்தி 18 March 2022 2:17 AM IST (Updated: 18 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி மாதுசாமி கூறினார்.

பெங்களூரு:

முழு அடைப்பு

  கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும் பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் ரகுபதி பட் பேசும்போது, "ஹிஜாப் விவகாரத்தில் ஐகோர்ட்டு தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தின் தொடக்கத்தில் சில மாணவிகள் செய்முறை தேர்வு உள்பட சில தேர்வுகளை எழுதவில்லை. ஹிஜாப் அணியாமல் விடுபட்ட தேர்வை எழுத முன்வரும் மாணவிகளுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவர்களுக்காக சிறப்பு தோ்வை நடத்த வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும், ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தும் மாணவிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

  அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டர், "ரகுபதிபட் முன்வைத்த 2 விஷயங்களை நான் ஆதரிக்கிறேன். தேர்வு எழுதாத மாணவிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும் போராட்டம் நடத்தும் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறான நிலையில் முஸ்லிம் அமைப்புகள் தீர்ப்பை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. அத்தகைய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேல்முறையீடு செய்யலாம்

  அதைத்தொடர்ந்து பேசிய சித்தராமையா, "ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பால் அதிருப்தி அடைந்து இருப்பவர்கள் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து அமைதி வழியில் போராட்டம் நடத்துவதை அரசு தடுக்க முடியுமா?" என்றார்.

  அப்போது ஜெகதீஷ்ஷெட்டர் மீண்டும் குறுக்கிட்டு பேசுகையில், "ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு எதிராக போராடுவதை சித்தராமையா நியாயப்படுத்த முடியாது. அவ்வாறு போராடுவது என்பது கோர்ட்டை அவமதிக்கும் செயல் ஆகும்" என்றார்.

  எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர் பேசும்போது, "ஹிஜாப் விவகாரத்தில் தேர்வு எழுதாத மாணவிகளுக்கு தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். முஸ்லிம் அமைப்புகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தவே போராட்டம் நடத்துகின்றன. இந்த விஷயத்தை கோர்ட்டு பார்த்து கொள்ளும்" என்றார்.

மாணவிகள் மீது நடவடிக்கை

  இந்த விவாதத்திற்கு பதிலளித்த சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, "ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை அரசு பின்பற்ற வேண்டும். காவிரி பிரச்சினையில் நீர் திறந்து விடாதபோது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கர்நாடகம் சந்தித்தது. நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அவரது நலன் கருதி சில கைதிகளை விடுவிக்க அரசால் முடிவு செய்யப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை.

  ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது. கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பு தேர்வு எழுத தவறிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணியாமல் வந்து தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவது கடினம். ஆயினும் இதுகுறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும் போராட்டம் நடத்தும் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
  ----

Next Story