மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழக-கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா; பக்தி கோஷம் முழங்க பூசாரி மட்டும் தீ மிதித்தார்


மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழக-கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா; பக்தி கோஷம் முழங்க பூசாரி மட்டும் தீ மிதித்தார்
x
தினத்தந்தி 18 March 2022 2:30 AM IST (Updated: 18 March 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழக-கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பக்தி கோஷம் முழங்க பூசாரி மட்டும் தீ மிதித்தார்.

தாளவாடி
மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழக-கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் பக்தி கோஷம் முழங்க பூசாரி மட்டும் தீ மிதித்தார்.
தாளவாடி மாரியம்மன்
ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியாக விளங்குவது தாளவாடி மலை. தமிழக- கர்நாடக எல்லையாக விளங்கும் தாளவாடி நகரின் மையத்தில் பக்தர்களை காக்கும் அன்னையாக தாளவாடி மாரியம்மன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
தாளவாடி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத்து மக்கள், கர்நாடக எல்லை கிராம மக்களும் வணங்கும் அம்மனாக தாளவாடி மாரியம்மன் உள்ளார். இந்த கோவிலின் திருவிழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
 தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும்  உள்ளது. அதாவது இந்த கோவிலை ஒட்டி முஸ்லிம் பள்ளி வாசல் உள்ளது. ஆனாலும் இருமதத்தினரின் ஒற்றுமையால் அக்னி குண்டம் பள்ளிவாசலின் முன்புதான் அமைக்கப்படும். இது இந்த கோவிலின் பெரும் சிறப்பாகும். 
திருவீதி உலா
 இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அம்மன் மலர் ஊஞ்சல் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் தாளவாடி மாரியம்மன், கும்டாபுரம் மாரியம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். தொடர்ந்து திருவீதி உலா நடந்தது.
இந்த வீதி உலா நேற்று அதிகாலை முடிந்தது. அதைத்தொடர்ந்து குண்டம் திருவிழாவுக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கின. நேற்று காலை கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் மாரியம்மன் கோவில் சேவா சங்கத்தினர் புடை சூழ கோவில் பூசாரிகள் அம்மன் அழைத்தல் நிகழ்வுக்காக தாளவாடி ஆற்றுக்கு சென்றனர்.
வேடம் அணிந்த கலைஞர்கள்
அங்கு உற்சவ அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சாமிகளுக்கு நீராட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து ஊர்வலம் தொடங்கியது. தலைமை பூசாரி சிவண்ணா தலையில் அம்மனை சுமந்து கொண்டு புறப்பட்டார்.
அவருடன் பரிவார தெய்வங்களாகிய காரேஸ்வரா, பீரேஸ்வரா சாமிகள், சிவன்-விநாயகர் சாமிகள் புடை சூழ முத்துக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்கியது. கொம்பு வாத்தியம், தாரை-தப்பட்டைகள் முழங்க கலைஞர்கள் பல்வேறு வேடங்களிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மைசூரு கே.என்.மகேஷ் குழுவினர் பாரம்பரிய வீரபத்ர நடனம் ஆடி வந்தனர். நஞ்சுண்டேஸ்வரா குழுவினரின் பொம்மை ஆட்டம், கரடித்தோல் கிரீடம் அணிந்து வந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகளுடன் ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. தாளவாடி விநாயகர் கோவில், சிவன் கோவில் உள்பட பல கோவில்களுக்கும் சாமிகள் கொண்டு செல்லப்பட்டன. கோவில் பூசாரிகள் பிறை வடிவ அரிவாளை தலையில் சுமந்து கொண்டு சென்றனர். அப்போது அருள் வந்து அவர்கள் துள்ளல் ஆட்டம் போட்டனர்.
2 ஆயிரத்து 500 கிலோ பூக்கள்
சாமியை வரவேற்கும் வகையில் பக்தர்கள் வழி நெடுகிலும் பூஜை பொருட்கள் வைத்து ஆசி பெற்றனர். மாரியம்மனை வரவேற்கும் வகையில் தாளவாடி அம்பேத்கர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் 18-வது ஆண்டாக பூ அலங்காரபாதை விரிப்பு செய்து இருந்தனர். சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ பூக்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அம்மனை சுமந்து வந்த பூசாரி இந்த பூ பாதையில் நடந்து சென்று விநாயகர் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்றார். இதுபோல் போயர் வீதி மக்களும் மலர் வீதி விரிப்பு செய்து இருந்தனர்.
அக்னி குண்டம்
இதற்கிடையே தாளவாடி மாரியம்மன் கோவில் முன்பு அக்னி குண்டம் தயார் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இந்த அக்னி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் 25 மாட்டு வண்டி மற்றும் 10 டிராக்டர்களில் எரிகரும்பு (விறகு) கொண்டு வந்து குவித்தனர். இந்த விறகுகள் பெரிய பெரிய மரங்களாகவே போட்டு எரியூட்டப்பட்டன.
காலை 8 மணி அளவில் குண்டம் தயார் செய்யும் பணிகள் தொடங்கின. மாரியம்மன் கோவில் சேவா சங்க நிர்வாகிகள் சுமார் 30 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி உயர அக்னி குண்டத்தை தயார் செய்தனர். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு குண்டம் தயார் செய்யப்பட்டது.
பூசாரி குண்டம் இறங்கினார்
மேலும், மாரியம்மனை வரவேற்கும் வகையில் குண்டத்தையொட்டி 40 அடி நீளத்துக்கு மலர் பாதை அமைக்கப்பட்டது. காலை 9.30 மணி அளவில் ஊர்வலம் கோவிலை அடைந்தது. அப்போது தலைமை பூசாரி சிவண்ணா கோவில் வளாகத்துக்குள் நுழைந்தபோது, குண்டத்தை சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் கர்நாடக பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து பூசாரி சிவண்ணா பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி தனி ஆளாக குண்டத்தில் ஏறி மாரியம்மன் சிலையை சுமந்து சென்றார். இந்த கோவில் விழாவில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவார் என்பதால் வேறு யாரும் தீ மிதிக்கவில்லை.
நேர்த்திக்கடன்
பூசாரி குண்டம் இறங்கியதும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். வெற்றிலை, உப்பு-மிளகு ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். இதுபோல் நேர்த்திக்கடனாக கோழிகளையும் குண்டத்தில் வீசினார்கள். அவற்றை மற்றபக்தர்கள் பிடித்துச்சென்றனர். பக்தர்கள் வீசிய பொருட்களால் குண்டம் தீப்பற்றி எரிந்தது. குண்டத்தின் சாம்பலை பக்தர்கள் சேகரித்து, நெற்றியில் விபூதியாக பூசி சென்றனர். தாளவாடி மாரியம்மன் கோவில் சிறப்பு வழிபாட்டு முறையாக இருக்கும், சாம்பிராணி தூபம் போடும் பூஜையை பலரும் செய்தனர். கோவில் முன்பு நெருப்பு சட்டியுடன் அமர்ந்து இருப்பவர்களிடம் காணிக்கை செலுத்தி, சாம்பிராணி மண் பெற்று நெருப்பில் போட்டு தூபம் காட்டினார்கள். இந்த சாம்பிராணி, அந்த பகுதியில் கிடைக்கும் ஒருவகை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.
பாதுகாப்பு
விழாவையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆசனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அதிகாரி ரங்கராஜ் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விக்கிரக விஜர்சன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

Next Story