பெங்களூருவில் முழு அடைப்பு அமைதியாக நடந்தது; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி
பெங்களூருவில் முழு அடைப்பு அமைதியாக நடந்ததாகவும், சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அமைதியான முறையில் நடந்தது
ஹிஜாப் விவகாரம் காரணமாக முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். முழு அடைப்பின் போது பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று (அதாவது நேற்று) முன்தினம் பெங்களூருவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளை அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தனா். அதன்படி, பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.
கடைகள் மட்டும் அடைப்பு
ஏற்கனவே பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சிறிய அளவிலான அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை. முஸ்லிம் அமைப்புகளும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பெங்களூரு சிவாஜிநகர், பிரேசர் டவுன், மெஜஸ்டிக், கமர்சியல் தெரு, டேனரி ரோடு, பம்பு பஜார், சிட்டி மார்க்கெட்டை சுற்றிய பகுதிகள் என சில பகுதிகளில் மட்டும் முழு அடைப்பு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வியாபாரிகளும் தாங்களாக வே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர்.
டி.ஜே.ஹள்ளி பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அங்கு இன்று (அதாவது நேற்று) காலையில் போலீசார் அணிவகுப்பும் நடத்தினார்கள். பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், பொதுமக்களுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படவில்லை.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story