‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 March 2022 9:06 PM (Updated: 17 March 2022 9:06 PM)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு நசியனூர் ரோடு வில்லரசம்பட்டியில் நால் ரோடு பகுதியில் பலர் குப்பைகளை ரோட்டு ஓரத்தில் போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் காற்றில் பறந்து வருவதால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாலு, வில்லரசம்பட்டி, ஈரோடு.

நேரத்துக்கு பஸ் வருமா?
அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் கடந்த 3 வாரங்களாக புதன்கிழமை மட்டும் மாலை 4.45 மணிக்கு வரவேண்டிய அரசு டவுன் பஸ் முன்னதாகவே 4.35 மணிக்கு சென்றுவிடுகிறது. இதனால் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவ- மாணவிகள் அந்த பஸ்சில் செல்ல முடியாமல் காத்து கிடக்கிறார்கள். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் தான் மாணவ- மாணவிகள் பஸ் ஏறி வீட்டுக்கு தாமதமாக செல்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அய்யம்பாளையம். 

சுகாதாரக்கேடு
டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பழைய பால் சொசைட்டி வீதி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சிதறி கிடக்கும் குப்பைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்றுவதோடு, அந்த இடத்தை சுத்தமாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு குப்பை தொட்டி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கள்ளிப்பட்டி.

சுத்தமில்லாத நீரோடை
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடையில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஓடையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. 
எனவே பொதுமக்கள் நலன் கருதி தவுட்டுப்பாளையத்தில் உள்ள நீரோடையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அருள், புதுப்பாளையம்.

நேரம் காட்டாத மணிக்கூண்டு
ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் நடந்தன. அப்போது ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதி அலங்காரப்படுத்தப்பட்டது. ரெயில் நிலையத்தின் முகப்பு வடிவத்துக்கு அழகு சேர்ப்பது மணிக்கூண்டாகும். அந்த மணிக்கூண்டு புனரமைக்கப்பட்டாலும், நேரத்தை காட்டுவதற்கு கடிகாரத்தில் முள்கள் பொருத்தப்படவில்லை. இதனால் மணி காட்டாத மணிக்கூண்டாக காணப்படுகிறது. இரவிலும் நேரத்தை காட்டும் வகையில் ஒளிரும் முள்கள் பதிக்கப்பட்டால் ஈரோடு ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும்.
காயத்திரி, மூலப்பாளையம்.


பாராட்டு
கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’  நாளிதழின் புகார் பெட்டி பிரிவு பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மாதேசியப்பன் வீதிக்கு நகராட்சி பணியாளர்கள் சென்று குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், கோபி.

Next Story