மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்; பெங்களூருவில் இன்று நடக்கிறது
மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
பிரச்சினைக்கு தீர்வு
கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 66 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட முடிவு செய்துள்ளது. மாநில அரசு இதற்காக திட்ட அறிக்கை தயாரித்து ஒப்புதல் வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த திட்ட அறிக்கை தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. தமிழக அரசு, இந்த மேகதாது திட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி வருகிறது.
மற்றொருபுறம் கர்நாடக அரசு, இது முழுக்க முழுக்க குடிநீர் வழங்கும் நோக்கத்தை கொண்ட திட்டம் என்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், இந்த மேகதாது திட்ட பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களும் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது கூறினார்.
காங்கிரஸ் பாதயாத்திரை
மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தியது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ம் ஆண்டு கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேகதாது திட்ட விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கும் நோக்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த வாரம் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மேகதாது திட்டம் தொடர்பாக விவாதிக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்ட நிபுணர்கள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மந்திரிகள், கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையின் அரசியல் கட்சி தலைவர்கள், மேகதாது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள், கர்நாடக சட்ட நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள். மேகதாது குறித்து சட்ட போராட்டத்தை துரிதப்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகதாது மட்டுமின்றி பிற மாநிலங்களுடன் பிரச்சினையில் உள்ள நதிநீர் பங்கீட்டு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியலில் மேகதாது திட்டம் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story