காங்கிரஸ், கூட்டணி ஆட்சி காலத்தில் பெங்களூரு மாநகராட்சியில் ரூ.13 ஆயிரம் கோடி முறைகேடு- ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா புகார்
காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சியில் ரூ.13 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.
பெங்களூரு:
ரூ.13 ஆயிரம் கோடி முறைகேடு
பெங்களூரு மாநகராட்சியில் பா.ஜனதா கட்சியின் தெற்கு மண்டல தலைவராக இருந்து வருபவர் என்.ஆர்.ரமேஷ். இவர், பெங்களூரு மாநகராட்சியில் கடந்த காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பெங்களூரு மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காங்கிரஸ் ஆட்சியிலும், கடந்த கூட்டணி ஆட்சியிலும் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் எதுவும் தரமாக செய்யாமல், முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. ரூ.850 கோடிக்கான பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. மீதி ரூ.12.150 கோடி முறைகேடு நடந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், வளர்ச்சி பணிக்கான டெண்டர் விடாமல், நேரடியாக தங்களது ஆதரவாளர்கள் மூலமாக பணிகளை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறாா்கள். இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
முதல்-மந்திரியிடம் மனு
மேலும் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்களையும் ஊழல் தடுப்பு படை போலீசாரிடம், என்.ஆர்.ரமேஷ் வழங்கி உள்ளார். அந்த புகாரை ஊழல் தடுப்பு படை போலீசார் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஊழல் தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரு மாநகராட்சியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து என்.ஆர்.ரமேஷ் மனுவும், ஆவணங்களையும் வழங்கி உள்ளார்.
Related Tags :
Next Story