குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சிறை தண்டனை


குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சிறை தண்டனை
x
தினத்தந்தி 18 March 2022 2:48 AM IST (Updated: 18 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை கோவை மண்டல கூடுதல் ஆணையர் பொன்னுசாமி தெரிவித்தார்.

சேலம்:-
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை கோவை மண்டல கூடுதல் ஆணையர் பொன்னுசாமி தெரிவித்தார்.
கருத்தரங்கு
குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவத்தினருக்கான கருத்தரங்கு நேற்று சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தொழிலாளர் நலத்துறை கோவை மண்டல கூடுதல் ஆணையர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். சேலம் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசினார்.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தை தொழிலாளர்களுக்கான சட்டமுறைகள் குறித்தும், அவர்களை மீட்பது, கல்வி அளிப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
கருத்தரங்கில் தொழிலாளர் நலத்துறை கோவை மண்டல கூடுதல் ஆணையர் பொன்னுசாமி பேசியதாவது:-
தொழிலாளர் நலத்துறையினர் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் இணைந்து புகார்கள் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 29 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த இடங்களில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 33 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தை நல பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அந்த குழந்தைகளின் கல்வி தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 19 வழக்குகள் முடிக்கப்பட்டு அரசுக்கு அபராத தொகையாக ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story