கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை வெட்டிக்கொன்ற பெண்
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் வெட்டிக் கொலை செய்தார். உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.
சேலம்:-
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை பெண் வெட்டிக் கொலை செய்தார். உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.
சாக்குமூட்டையில் பிணம்
சேலம் அருகே அழகாபுரம் படையப்பா நகரில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கிணற்றில் சாக்குமூட்டை ஒன்று மிதந்தது.
உடனே போலீசார் அந்த பகுதி மக்களின் உதவியுடன் அந்த சாக்கு மூட்டையை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அதனை அவிழ்த்து பார்த்த போது அதில் ஒரு ஆணின் உடல் இருந்தது. அந்த உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது யாருடைய உடல் என்று அழகாபுரம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
சரண்
இதனை அறிந்த அழகாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி விஜயலட்சுமியும், குமரன் என்பவரும் அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பாவிடம் சரண் அடைந்தனர். அப்போது, விஜயலட்சுமி, குமரன் என்பவருடன் சேர்ந்து வெங்கடேசனை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் புஷ்பா, அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விஜயலட்சுமி, குமரன் ஆகிய இருவரையும் ைகது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
போர்வெல் தொழிலாளி
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). போர்வெல் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயலட்சுமியின் தங்கை சாந்தி (30). அவருடைய கணவர் குமரன் (32). கார் டிரைவர். இவர்களும் மிட்டாபுதூரில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரது வீடுகளும் அருகருகே இருந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் வேலைக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டார். விஜயலட்சுமி மட்டும் மிட்டாபுதூரில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர், வெளிநாடு செல்லும் போது குமரனிடம் மனைவி, பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை குமரன் செய்து வந்துள்ளார்.
ரகசிய சந்திப்பு
இதனால் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்களது நெருக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சாந்திக்கு அரசல் புரசலாக தெரிய வந்துள்ளது. உடனே அவர், கணவர் மற்றும் அக்காளை கண்டித்துள்ளார். அப்படி இருந்தும் கள்ளக்காதல் ஜோடி அதனை கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் சாந்தி, தன்னுடைய கணவரிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதேநேரத்தில் குமரனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கள்ளக்காதல் தொடர்ந்தது
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் குமரன் அவ்வப்போது விஜயலட்சுமியை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது.
அப்படி இருந்தும் கடந்த 10-ந் தேதி வெங்கடேசன் ஊருக்கு வருவதாக கூறினார். அவரை அழைத்து வர குமரன் காரில் கோவை விமான நிலையத்துக்கு சென்றார். இருவரும் சேலத்துக்கு காரில் வந்தனர். வரும் வழியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
வெட்டிக்கொலை
அன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகும் வெங்கடேசனும், குமரனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது விஜயலட்சுமியுடனான தொடர்பு குறித்து குமரனிடம் வெங்கடேசன் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கள்ளக்காதலை விட்டு விடுமாறு குமரனை எச்சரித்ததாகவும் தெரிகிறது.
இதனால் வெங்கடேசனை உயிருடன் விட்டால் இனி நாம் நினைத்த நேரம் உல்லாசம் அனுபவிக்க முடியாது என விஜயலட்சுமியும், குமரனும் நினைத்துள்ளனர். உடனே வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். கழுத்தில் வெட்டுக்காயம் பட்ட அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சாக்குமூட்டையில் கட்டி...
வெங்கடேசனை கொலை செய்த பிறகு கொலையை எப்படி மறைப்பது என்று விஜயலட்சுமியும், குமரனும் யோசித்தனர். அப்போது வெங்கடேசன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஊருக்கு வருவது விஜயலட்சுமிக்கு மட்டும்தான் தெரியும். எனவே உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏதாவது கிணற்றில் வீசி விட்டால் யாரும் கண்டுபிடிக்க முடியாது. வெங்கடேசன் தென் ஆப்பிரிக்காவில்தான் இருக்கிறார் என்று உறவினர்களிடம் கூறி விடலாம் என இருவரும் யோசித்தனர்.
அவர்களது யோசனைப்படி கடந்த 11-ந் தேதி இரவு வெங்கடேசன் உடலை ஒரு சாக்கில் மூட்டையாக கட்டி படையப்பாநகரில் உள்ள திலிப் என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் வீசி விட்டனர். அதன்பிறகு இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். வழக்கம் போல் இருவரும் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.
பரபரப்பு
வெங்கடேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு போலீசார் விசாரணையை தொடங்கியதால், எப்படியும் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் இருவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் அழகாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story