கோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகள்; விவசாயி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தம்


கோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகள்; விவசாயி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 18 March 2022 3:21 AM IST (Updated: 18 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விவசாயி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை நிறுத்தினார்கள்.

சென்னிமலை
கோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விவசாயி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை நிறுத்தினார்கள். 
குழாய் அமைத்தனர்
சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு தோட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையை ஒட்டியபடி நிலத்திற்குள் குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அனுமதி இல்லாமல் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வந்தது.
அகற்ற முயன்றதற்கு எதிர்ப்பு
அதில் அனுமதியின்றி கொண்டு செல்லும் குழாயை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதாக கூறி நேற்று நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் தார் சாலையை ஒட்டியுள்ள குழாய்களை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயி குடும்பத்தினர் குழாயை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவுப்படி தான் குழாய்களை அகற்றுகிறோம்’ என்று சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் தெரிவித்தனர். உடனே விவசாயி குடும்பத்தினர், ‘இந்தக் குழாய்களை அகற்றினால் நூற்றுக்கணக்கான எங்களது தென்னை மரம் காய்ந்து விடும். இதனை நம்பி தான் நாங்கள் பிழைத்து வருகிறோம்’ என்று கூறி குழாய் அகற்றும் பணியை தடுத்தனர்.
பணி நிறுத்தம்
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட விவசாயி மனைவி விஷம் குடித்ததாக கூறி சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி குழாய்கள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story