ஈரோட்டில் பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள தனிக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு


ஈரோட்டில் பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள தனிக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2022 3:43 AM IST (Updated: 18 March 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள தனிக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு
ஈரோட்டில் பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள தனிக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
தனிக்குடிநீர் திட்ட பணிகள்
ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியில் பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள மாநகராட்சிக்கான தனிக்குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.484 கோடியே 45 லட்சம் செலவில் தனிக்குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் இடைக்கால (2032) மக்கள் தொகையின்படி, 7 லட்சம் மக்களுக்கு 114.75 மில்லியன் லிட்டர் குடிநீர் மற்றும் உச்சகட்ட (2047) மக்கள் தொகையின்படி 9 லட்சத்து 5 ஆயிரம் மக்களுக்கு 147.69 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது. பவானி நகரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் ஊராட்சிக்கோட்டை அருகில் உள்ள வரதநல்லூர் ஊராட்சியில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.
சோதனை ஓட்டம்
சுத்திகரிக்கப்பட்ட நீர் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் இருந்து, 23 கிலோ மீட்டர் குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு மற்றும் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த இரு தரைமட்ட தொட்டிகளில் இருந்து நீருந்தி குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டு உள்ள 21 மேல்நிலை தொட்டிகளுக்கும், ஏற்கனவே உள்ள 46 பழைய மேல்நிலை தொட்டிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் 732 கிலோ மீட்டர் நீளமுள்ள பகிர்மான குழாய் மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story