சென்னை ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழா


சென்னை ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழா
x
தினத்தந்தி 18 March 2022 3:54 PM IST (Updated: 18 March 2022 3:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் துறவியர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி சென்னை வந்து புதிய ராமகிருஷ்ண மடம் தொடங்கி நேற்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சரித்திர புகழ்வாய்ந்த நிகழ்வினை கொண்டாடும் வகையில் சென்னை ராமகிருஷ்ண மடத்தில், ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத்தலைவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் வரவேற்றார். மேலும், 125-வது ஆண்டின் ஓராண்டு விழா குறித்த விவரங்களை தெரிவித்து உரையாற்றினார். கூட்டத்தில், சென்னை வித்யா பீட செயலர் சுவாமி சுகதேவானந்தர், சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் சுவாமி சத்யக்ஞானானந்தர் மற்றும் பிற துறவியர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கவுதமானந்தஜி மகராஜ் அருளாசி வழங்கி பேசும்போது, சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பக்தி மற்றும் சேவை மனப்பான்மையுடன் சென்னை மடத்தில் ஆற்றிய தொண்டுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவரது காலத்தில்தான் சென்னையில் மயிலாப்பூரில் ஆதரவற்ற மாணவர்களுக்கான மாணவர் இல்லமும், தங்கசாலையில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மாணவிகளுக்கான ஒரு பள்ளியும் தொடங்கப்பட்டது என்பதும், அவைகள் இன்றும் தனது சேவையினை வெற்றிகரமாக பொது சேவை நோக்கத்திற்காகவே லாப நோக்கமின்றி செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story