கலப்பு உரம் விற்பனையை தடுக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கலப்பு உரம் விற்பனையை தடுக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கலப்பு உரம் விற்பனையை தடுக்கக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
இதில் உரக்கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் யூரியா மூட்டையில் மண், மரத்தூள் போன்றவை கலந்து விற்பனை செய்யப்படுவதாகக்கூறி அந்த யூரியா மீது தண்ணீர் ஊற்றி மண், மரத்தூள் இருப்பதை பிரித்து காண்பித்தனர்.
மேலும் கலப்பு உரம் விற்பனையை தடுக்கக் கோரி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
அப்போது புருசோத்தமன் கூறுகையில், மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 45 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும் நடக்கிறது.
வேளாண்மைத் துறை பரிந்துரையின் படி ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து யூரியா அளிக்க வேண்டும். தற்போது யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படாத கலப்பு உரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலப்பு உரத்தில் யூரியா, மண், மரத்தூள் மட்டுமே உள்ளது. எனவே போலி உரங்கள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.
மேலும் அதை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். போலி உர ஆலைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையின்றி யூரியா கிடைக்க ஆதார் எண், கணினி சிட்டா பயன்படுத்தி பதிவு செய்து சாகுபடிக்கு ஏற்ற அளவு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என்றார்.
கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story