வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா


வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 18 March 2022 5:44 PM IST (Updated: 18 March 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் புகழ்வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் புகழ்வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
கொடியேற்றம்
ராமநாதபுரம் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ளது  வழிவிடுமுருகன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா காவடி, பால்குடம் போன்றவற்றுடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 82-வது பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர திருவிழா நேற்று  சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிவயல் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், காவடி, வேல்குத்தி, கரும்பு-இளநீர் தொட்டிகள் கட்டி ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முருகன் கோவிலை அடைந்தனர். 
வெப்பதாக்கம்
வேல்குத்தி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் தங்களின் உடலில் பல இடங்களில் வேல் குத்தி அரோகரா என்று கோஷமிட்டபடி வழியெங்கும் பக்தர்களின் கூட்டத்தில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நேற்று காலை முதலே அதிக வெயில் மற்றும் வெப்ப தாக்கம் இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக வந்திருந்து விழாவை கண்டு களித்ததோடு, முருகனின் அருள் பெற்று சென்றனர். 
கொரோனா பரவல் குறைந்து கிட்டத்தட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அதிகஅளவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து விரதம் இருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் அதிகஅளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். 
பூக்குழி
பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் நிறைவாக நேற்று இரவு கோவிலின் முன்புறம் பிரமாண்டமாக வளர்க்கப்பட்ட பூக்குழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷம் முழங்க பூக்குழி இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Next Story